Tuesday, June 26, 2012

பெண்ணியம்



நாகரீகம் வளர்ச்சியடையாத அன்றை காலத்தில் திருமணம் என்ற முறை இல்லை. தனிமனிதன் தன்னை போன்றவர்களுடன் இணைந்து ஒரு கூட்டமாக வாழ்ந்தபோது இன்றைக்கு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத மேலை நாட்டுக் கலாச்சாரமாகிய ஒருவனுக்கு ஒருத்தி என்றில்லாமல் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் விருப்பபட்டவருடன் இணைந்து வாழும் வாழ்க்கை முறையை மேற்கொண்டனர்.

பெண் தாய்மையடைவதால் சிறப்பானவளாகக் கருதப்பட்டாள். கூட்டத்தில் உள்ளவர்களை அரவணைத்து வழிநடத்தும் தலைமை பொறுப்புடையவளாக பெண் இருந்தாள். மேலும் ஒரு எல்லைக்குள் இருப்பவர்கள் வேறு ஒரு கூட்டத்தார் வசிக்கும் எல்லைக்குள் சென்றால் பாதுகாப்பு கருதி அவர்களை கொல்லக்கூடத் தயங்கமாட்டார்கள். அப்படிபட்ட சூழ்நிலையில் கூட்டத்தில் வயதுமுதிர்ந்த பெண்மணி சமாதான பேச்சுக்காக அந்த இனத்தவர் வசிக்கும் 
இடத்திற்கு செல்வாள்.


வயதான பெண்ணை அந்த இனத்தவர் கொல்ல நினைப்பதில்லை. காரணம் அவள் அன்பு அரவணைப்பு கொண்ட தாய்மைப் பேறுகொண்டவள். அவளால் அவர்களுக்கு தீங்கு நேராது என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகவே ஆரம்பத்தில் பெண் தலைமைப் பொறுப்பேற்று தன்னுடைய குழுவிலுள்ளவர்களைப் பாதுகாத்தாள்.

அதன் பின் ஆண் உணவு தேடும் பொருட்டு வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடிவிட்டு களைப்புடன் திரும்பும் அவன் தாகத்துக்கு தண்ணீர் கேட்கவோ, அவனின் தேவைகளைக் கேட்கவோ தினம் ஒருவரை எதிர்பார்க்க வேண்டியிருந்தது.


அவனின் உடல் சோர்ந்த நிலையில் தோள் சாய அவனின் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற உரிமையுடையவளாக ஒரு உறவுக்காக பெண்ணைச் சொந்தமாக்கிக் கொள்ள மனம் ஏங்க ஆரம்பித்ததன் விளைவாக திருமணமுறை உருவானது.

திருமணத்தின் பிறகு ஆண்தான் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவளோடு குடும்பம் நடத்துவான். பெண்ணின் வீட்டில் பணிவிடைகள் செய்வான். இந்த சூழலில் ஒடுங்கிய அவன் மனம் குரூரமாக சிந்திக்கத் தொடங்கியது. ஆண் பெண் என்ற வேறுபாடு வலுப்பெறத் தொடங்கியது. தன்னுடைய இனத்தில் உள்ள ஒருவன் தலைவனாக இருந்தால்தான் தன்னுடைய ஆசைகளை, தேவைகளை சுதந்திரமாக செய்யமுடியும் என்ற எண்ணம் 
தோன்றியது முதல் பெண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டது.



அதற்குப்பின் வந்த காலக்கட்டங்களில் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் தனக்கு சொந்தமாக்கிகொள்ளலாம். ஆனால் பெண் அவ்வாறு செய்ய இயலாது என்ற விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினான். பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்.

தொல்காப்பியம் நமக்கு கிடைத்த பழைய நூல்களில் ஒன்று. அதில் கூட பெண் என்பவள் இப்படி இருக்க வேண்டும் என்று விதிகளை சொல்லுகின்றார். அகத்திணையில் வரும் ஐந்திணைகளில் வாழும் மக்களின் குணங்களை அவர்களின் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு சொல்லும் போது தலைவன் போருக்காக வெளியே சென்று பல மாதங்கள் தங்கிவிடுவான். 
அந்த சூழலில் தலைவி தலைவனை நினைத்து உருகிக்கொண்டிருக்க வேண்டும். வழி மீது விழியை வைத்துவிட்டு மனதை தலைவன் போன இடத்துக்கே அனுப்பிவிட்டு மற்றவர்கள் பார்த்துவிடாத வண்ணம் தன் உடலை பேணாமல் உண்ண மறந்து, உறங்க மறந்து, அலங்காரம் இல்லாமல் பசலை 
பாய்ந்து உடல் மெலிந்து அவள் இருக்க வேண்டும். 

ஆனால் அங்கே போர் நிமித்தமாகவோ, கல்விக் கற்றும் பொருட்டோ, தூது சொல்லவோ சென்ற தலைவன் தலைவியின் பிரிவுத்துயர் தாங்காமல் 
தன் உடலை பேணி மற்றப்பெண்களை மயக்கும் வண்ணம் திடமாக உடலை வளர்த்து தன்னுடைய உடல்பசியைக்கூட அடக்க முடியாமல் பெண்களிடம் செல்கிறான். தலைவனின் உடல்பசியை போக்கிய அந்த பெண்ணை பரத்தை என்று கூறி ஒழுக்கநிலை தவறியவள் என்று தூற்றி, ஒதுக்கி வைத்த சமூகம் 
அவளிடம் சென்ற தலைவனை மட்டும் போற்றி புகழ்பாடி பரணிபாடுகின்றது. ஆண்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட பெண்ணை வீட்டுக்குள் ஒழித்து வைத்து விட்டு தங்களுடைய ஆசைகளை தீர்த்துகொள்ள அங்கீகாரத்துடன் உருவாக்கியதுதான் தாசி என்ற ஒரு பிரிவுப் பெண்கள்.


பிற்காலத்தில் தாசி வேசியாக மாறி இன்று விபச்சாரியாக உருவெடுத்து பெரும் சர்ச்சைக்குரியவர்களாக இருக்கிறார்கள். இந்த பெண்கள் தாங்கள் செய்வது தவறல்ல, இது ஒரு தொழில் என்றும் கூறுகின்றனர். ஒரு வகையில் யோசித்து பார்த்தால் சரி என்றுதான் தெரிகிறது. பண்டமாற்று முறை மாதிரிதான் இதுவும. இவனுக்கு உடல் சுகம் தேவை, அவளுக்கு பணம் தேவை. இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு இல்லை. ஆனால் இருவரும் இணைந்து செய்யும் தொழிலில் இன்பம் மட்டும் அவனுக்கு துன்பமும், தூற்றுதலும் 
அவளுக்கு. இது என்ன நியாயம்?


அன்று படிப்பறிவில்லாதவர்கள் பலர் இருந்தனர். அதனால் பகுத்தறியத் தெரியாததால் மற்றவர் சொல்லை அப்படியே நம்பி அதை வழிநடத்தினார்கள். ஆனால் இன்று படிப்பறிவும், பகுத்தறிவும் இருந்தும் நாம் இப்படி இருக்க என்ன காரணம் யோசித்து பாருங்கள்.

பலர் பண்பாடு என்ற போர்வையைப் போர்த்திகொண்டு மறைவில் ஒழுகுகின்றனர். சிலர் கலாச்சாரம் என்ற திரைக்கு மறைவில் இருந்து கொண்டு சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள் முன் ஒழுக்கம் என்றால் ஒருவனுக்கு ஒருத்தி, கலாச்சாரம் என்றும் ஆணுக்குப் பெண் அடிமை என்றும் போதித்துக் கொண்டு இருக்கின்றனர். இங்கு இவை பெண்களுக்கு மட்டுமே போதிக்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.

பெண்கள் கண்ணகியாய் கற்பு நெறியில் வாழவேண்டும் என்று சொல்கிறார்களே தவிர ஆண்களிடம கோவலனாக வாழக் கூடாது என்று வலியுறுத்துவதில்லை ஆண் பிள்ளையை குழந்தைப் பருவத்தில் 
இருந்தே கட்டவிழ்த்து சுதந்திரமாக வளர்க்கிறோம். அவனின் எந்த செயலையும் தட்டிக்கேட்பதில்லை வளரும் பருவத்தில் வயதுக்குரிய பால் கவர்ச்சியின் காரணமாக அவன் உணர்ச்சிவயப்பட்டு செய்யக்கூடிய செயல்களை கவனிப்பதில்லை. அரும்பும் போது கண்டும் காணாமல் விட்டுவிட்டு அவனுள் வக்ரம் மரமாக வளர்ந்தபின் வெட்டமுடியாமல் கவலைப்படுவதில் பயனில்லை.

இன்று பால் உணர்வைத் தூண்டக் கூடிய பத்திரிக்கை, படங்கள், வீட்டிற்குள்ளேயே வந்து போதிக்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துதுள்ளது. அதில் உள்ள நல்ல விஷயங்களைவிட நமக்குப் 
பாதிப்புகளைத் தரக்கூடிய விஷயங்களை விரும்பித் தேடுகிறோம். குழந்தைகள் தவறு செய்யும் போது ஆரம்பத்தில் விட்டுவிடுகிறோம். பின் நம்முன்னால் நடக்காதவரை பரவாயில்லை என்ற நிலைக்கு 
வந்துவிடுகிறோம்.

ஆனால் பெண்குழந்தையை ஆரம்பத்தில் இருந்தே பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வளர்ப்பதாக எண்ணி கோழையாக வளர்த்து விடுகிறோம். இந்த வளர்ப்புமுறையில் வித்தியாசப்படுத்துவதால்தான் இன்றைக்கு
பத்திரிக்கைகளில், செய்திகளில் அதிகமாக பாலியல் வன்முறைகளைப் பற்றிய செய்திகள் அதிகரித்து வருகின்றன.

பெண்ணை எவ்வளவுக் கட்டுப்பாடாக வளர்க்கிறோமோ அதில் கால் பங்கு அக்கறையை ஆண் குழந்தைகள் மீது செலுத்தினோமானால் இந்த வக்கிரங்கள் குறையும். 'கற்பு பறிபோய் விடும் கவனமாகப் பார்த்துக்கொள்' என்று வலியுறுத்துபவர்கள், அதைப் பறிப்பவர்களிடம் பறிப்பது தவறு என்று வலியுறுத்த ஏன் மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.

தவறு என்று நாம் எதைச் சொல்கிறோம்? இரு உடல் இணைவதையா? இல்லை இரு உள்ளங்கள் இணைவதையா? மனம் பொருந்தாக் காதலையும், காமத்தையும் தவறு என்கிறோம். அப்படியானால் நம்மில் எத்தனை பேர் மனம் பொருந்தி வாழ்கிறோம்? நம் மனதின் ஆழத்தில் சென்று உண்மையறிந்தோமானால் ஒருவரும் மனம் பொருந்திக் காலம் முடியும் வரை வாழ்வதில்லை என்ற உண்மைப் புரியும்.

காதல் இயற்கை தரும் இன்பம். கடைசிவரை காதலுடன் இணைந்தால் இன்பமாகத்தான் இருக்கும். ஏன் இன்பமாக இருக்கிறது என்று பார்த்தால் - அங்கு நீ , நான் என்ற போட்டி இல்லை. இருவரும் சமம், அன்பை விதைத்தால் அன்பைப் பெற முடியும், அடிமைத்தனத்தை விதைத்தால் அதையே அறுவடை 
செய்ய இயலும். எதைக் கொடுக்கிறோமோ அதை வாங்குகிறோம். அதனால்தான் காதல் இன்பமாக இருக்கிறது. 

ஆனால் திருமணம் என்ற பந்தம் பெணணின் சுதந்திரத்தைப் முழுமையாக பறித்துவிட்டு ஆணின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆயுள் முழுமைக்கும் போடப்பட்ட ஒப்பந்தப் பத்திரம். அதில் பெண் தன் ஆசை விருப்பங்களைப் புதைத்துவிட்டு இயந்திரம் போல செயல்படும் கட்டாயத்துள் திணிக்கப்படுகிறாள்.

இன்று காதலிக்கும் பெண்கள் குறிப்பிட்ட காலம் வரை இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஆணும் பெண்ணும் உடலால் இணையும் வரை அந்த இன்பம் நீடிக்கின்றது. இணைந்த பின் ஆண் மகிழ்ச்சியாக இருக்கிறான் ஆனால் பெண் அவமானத்தால் கூனிக் குறுகிபோய் விடுகிறாள். இந்த வேறுபாடு எதனால் வருகிறது என்றால் பெண்ணின் குழந்தை பருவம் முதல் அவளுக்கு கற்பு பற்றிய போதனைகள் போதிக்கப்பட்டு ஆழமாக அவளின் மனதில் விதைக்கப்படுகின்றன. ஆண்பிள்ளைகள் அவ்வாறு வளர்க்கப்படுவதில்லை.

பெண் பட்டங்கள் படித்து பாரினில் சென்றாலும் அவள் குடும்பம் என்ற கூரைக்குள் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். பெண்கள் புலம் பெயர்ந்த நிலையில் தங்களுடைய கல்வியின் மூலமாக உயர் பதவி வகித்தாலும், அலுவலகங்களில் ஆண்களுக்கு மேலே வேலை செய்யும் போது ஆண்களின் பொறாமையால் பல அவதூறுகளுக்கு ஆளாகிறாள். திருமணமான பெண் வீட்டில் கட்டுப்பாடுளை களைய முடியாமல் இந்த சமுதாயம் வகுத்த கோட்பாடுகளுக்குள் சிக்கி வெளிவரமுடியால் தவிக்கிறாள்.

திருமணமாகாத பெண் சமூகத்தில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவளை பெருமையுடன் பார்க்ககூடிய நிலையில் இந்த சமூகம் உள்ளதற்கு மாறாக அவளை குறைக்கூறிக்கொண்டு இருக்கிறது. இதில் ஆண்களை மட்டும் சொல்லவில்லை, சில பெண்களையும்தான். காரணம் உளவியல் ரீதியாக 
சொல்வோமானால் ஒருவரை துன்புறுத்தும் போது அவர்கள் மனதளவில் ஒடுக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டு அந்த காயத்தின் தழும்பு ஆறாத வடுவாக அவர்களின் மனதில் பதிந்துவிடுகிறது. பின்னாளில் தான் அனுபவித்த வேதனையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற குரூர மனம் வெளிப்பட்டு அதன்விளைவால் பல மருமகள்கள் கொடுமைக்கு ஆளாவதை இன்றும் நாம் காணலாம். ஆக இதில் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்ட மனம் ஆக உருவாகிறது. அதன் விளைவாக இன்று 
நம்மில் பலர் துன்பங்களை அனுபவிக்கின்றோம்.


எனவே இன்று பெண் திருமணம் என்ற பந்தத்தை வெறுக்க சில ஆண், பெண்களின் விரும்பத்தகாத செயல்களே காரணம். ஆண்களின் ஆதிக்கத்தால் பெண் ஆண் சமுதாயத்தையே வெறுக்கும் சூழல் இன்று நிலவி வருகிறது. உதாரணமாக தீவிரவாத பெண்ணியம் அதிகரித்து வருகிறது. மேலும் 
ஆண்களுடனான உடல் உறவுகளை பெண் வெறுக்க ஆரம்பித்துவிட்டாள். காரணம் திருமணத்திற்கு முன் இருவரும் இணையும் போது பெண் மட்டும் கருத்தரிக்கிறாள். பெண்ணை தவறான காரியம் செய்துவிட்டாள் என்று ஒதுக்குவதால் பெண் ஆணுடன் சேருவதை தவிர்த்து விட்டு பெண் 
பெண்ணுடனேயே சேருகின்ற நிலை வந்துவிட்டது.

இது இன்று சர்ச்சைகுறிய விசயமாக இருக்கிறது. உண்மையில் எல்லா இடங்களிலும் மறைமுகமாக நடந்து கொண்டிருந்த உறவு இன்று பகிரங்கமாக ஒத்துகொண்டு செய்யக்கூடிய அளவில் உருவெடுத்துகொண்டதால் உயிர் உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும் ஆண் பெண் உறவில் விரிசல் உருவாகிவிட்டது. உயிர் உற்பத்தி நின்றுவிட்டால் இந்த உலகம் எப்படி நிலைப்பெறும்?

எனவே கொஞ்சம் சிந்தியுங்கள். இன்று பெண்ணுக்கு எதிரி ஆண் என்றும் பெண் என்றும் பிரித்து கூறவில்லை. இருவரும் இருவருக்கும் நன்மைகளும் செய்கிறோம், தீமைகளும் செய்கிறோம். ஒருவரின் தேவை மற்றொருவருக்கு தேவைப்படுகிறது என்கிறபோது இடையே எதற்கு இந்த பிரிவினை பேதம்? எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாத 
உணர்வுகளோடு உறவாடும் உயிர்களாக உலாவந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைக்கையில் இன்பமாய் இருக்கிறது. அந்த சூழுல் உருவானால் நாளைய உலகம் யுத்தகளமாக இல்லாமல் பூக்கள் பூக்கும் நந்தவனமாக இருக்கும்.

பெண்ணியம் என்ற தலைப்பில் ஆணைப்பற்றிய கருத்து எதற்கு என்று எண்ணம் வேண்டாம். இது வரை பெண்ணை பற்றி கூறி நம்முடைய சிறப்புகளை எடுத்து சொன்னாலும் பெண்ணியம் என்றாலே பெண்களை பற்றிய வருணனைகள், மிதவாத பெண்ணியம், தீவிரவாத பெண்ணியம் என்று, நமக்கு என்று தனி உலகம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு, ஆண்கள் மீது குற்றம் சுமத்துவது என்ற கொள்ளைகளில் இருந்த மாறுபடுங்கள்.

நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ வேதாந்தம் சொல்வதாக நினைக்கவேண்டாம். நம்மால் எதை செய்ய முடியும், நம் சக்திக்கு தகுந்தது என்ன என்பது கண்டிப்பாக நமக்குத் தெரியும். அதை விட அதிகமாக வரும் போது அதைத் தவிர்க்க வேண்டும், நம்மில் எத்தனை பேர் அதைச் செய்கிறோம்? அதிக வேலை, அதிக லாபம் இப்படி அதிகமான எல்லாவற்றையும் இழுத்துபோட்டுகொண்டு செய்யும் போது 
அதிகமான துன்பங்கள் நேரிடுகிறது. ஆனால் நாம் செய்த அதிக வேலையால் வந்த துன்பம் என்பதை மறந்து விட்டு, துன்பம் என்பதை மட்டும் நினைத்து புலம்புவோம்.

மேலாண்மை விதி ஒன்று இருக்கிறது. என்னவென்றால் மறுக்க வேண்டியதை ஒப்புக்கொள்ளும் போது பிரச்சனைகள் நேரிடும் என்று. இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். பல நேரங்களில் மற்றவர்களுக்காக, சில நேரங்களில் நமக்காக முடியாது என்று தெரிந்தும், நாம் செய்யக் கூடிய காரியங்கள் இன்பத்தை விட அதிகமான துன்பங்களைத்தான் நமக்குத் தருகிறது.

ஆணைவிட அதிகமாக இருக்கும் அழகான உறுப்புகளான கருப்பை, மார்பு. இவை இரண்டினாலும் பெண்ணை விட ஆண்தான் இன்புறுகிறான். பெண் பாதிக்கப்படுகிறாள். கருப்பை குழந்தை பெறும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆணுக்கு தகப்பன் என்ற பதவி கிடைக்கிறது சமூகத்தில். 
ஆனால் பெண்ணுக்கு தாய் என்ற பதவி - கூடவே வலி வேதனை. குழந்தை பெற முடியாதவளுக்கு மலடி என்ற பட்டம் கிடைக்கிறது. சில நேரங்களில் கருவறையும் கல்லறைதான். உணர்வுகள் உரசி உடல்களை தீண்டும் போது உருவாகும் உயிரை வெளியே வந்து இந்த அவலமான உலகில் அலைக்கழிய 
வேண்டாம் என்று உள்ளே தீயிலே கருக்கி சாம்பலாக்கும் சிவமாக பெண் உருவாகிறாள். உயிர்களைப் படைக்கும் உன்னத படைப்பாளியும் அவளே.

பெண்ணின் உடல் உறுப்பான மார்பு. அதைப்பற்றிக் கண்டிப்பாகச் சொல்லவேண்டும். இது குழந்தைக்கு பால் புகட்டக்கூடிய அமுதசுரபி என்பதைவிட ஆண்கள் பார்வையில் காமம் தரக்கூடிய கவர்ச்சிப் 
பொருளாகத்தான் இருக்கிறது. பெண் என்ன உடை அணிந்தாலும் எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் அவளை, அது ஒரு உறுப்பு என்ற எண்ணம் மறைந்து கற்பை போல் மறைத்து பாதுகாக்கும் பொருட்டு பழக்கப்பட்டுவிட்டதால் ஆண்களும் அப்படியே வளர்க்கப்படுகிறார்கள். இப்படிப் பட்ட சூழலில் மனிதனின் இயல்பான குணம் எதை மறைக்க முயலுகிறோமோ அதை தேடிச் சென்று பார்ப்பது என்பதுதான். அதற்காக மறைக்காமல் வாங்கள் என்று அர்த்தம் கொள்ளாதீர். 

பெண்களே நீங்கள் அதிகமாக உங்களை மறைக்காதீர்கள். இதை ஆடைக்குச் சொல்லவில்லை. உங்கள் ஆசைகள், தேவைகள், வலிமைகள், பெருமைகள, திறமைகள், இவைகளை வெளிப்படுத்துங்கள். எற்கனவே சொன்ன மாதிரி மறுக்க வேண்டிய விசயங்களை மறுத்துவிடுங்கள், கேட்க வேண்டிய விசயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேவைக்கு மீறி ஆசைப்படாதீர்கள், தேவையை கேட்க அஞசாதீர்கள். பெண்களுக்கு என்று சொன்ன இலக்கணங்கங்கள் ஆணுக்கும் பொருந்தும். ஆணுக்குச் சொன்ன இலக்கணங்கள் பெண்ணுக்கும் பொருந்தும். உதாரணமாக நிறையச் செய்திகளை சொல்லலாம். நளனின் சமையல் பக்குவம், ஜான்சி ராணி போன்ற பெண்களின் வீரம் இவற்றை குறிப்பிடலாம்.

 எனவே கீதையில் கண்ணன் சொன்ன மாதிரி எதுவும் நிரந்திரமில்லை. இன்று ஒருவருடைய பொருள் நாளை மற்றொருவருடையது. இததான் நடக்கிறது. இதை புரிந்து கொண்டால் நாம் நம்மை புரிந்து கொள்ளமுடியும்,
நம்மை புரிந்து கொண்டால் மற்றவர்களை புரிந்து நடப்போம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் உலகம் இன்பமயமாகும். 


எழுதியவர்: மு.சரளாதேவி - கோவை

நன்றி : தமிழமுதம் 

Monday, June 11, 2012

செம்மொழியின் நிலை





      செம்மொழி பற்றி பேசுமுன் மொழியின் ஆரம்பகாலதையும் அதன் படிப்படியான வளர்ச்சி பற்றி நாம் பார்க்கவேண்டும்.மனிதன் தோன்றிய ஆரம்பகாலத்தில் அவனின் மன உணர்வுகளை மற்றவர்களுக்கு தெரியபடுத்தவும் தன் தேவைகளை கேட்கவும் முதலில் அவன் கையாண்டது சைகை மொழி இந்த சைகை மொழிதான் இன்றும் நம்மிடையே பயன்பட்டு வருகிறது அதன் பின் உணவு தேடும் பொருட்டு இடம்பெயர்ந்து செல்லுகையில் எதிர்படும் ஆபத்துகளை தனக்கு பின் வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் குறியீடுகள், கல்வெட்டுகள் மூலமாக உருவங்களை வரைந்தான், அதன் பின் நாகரிக வளர்ச்சியின் காரணமாக சொல் , எழுத்து தோன்றி படிப்படியாக வளர்ந்து பின் பல அறிஞர்கள் மூலமா செதுக்கப்பட்டு ஒரு உருவமாக செம்மையாகபட்டது நம் தமிழ்மொழி . 

     அத்தகைய பழமையான நம் தமிழ் மொழியின் பிறப்பையும் வளர்ச்சி நிலைகளையும் பார்க்கலாம் மொழியின் ஆரம்ப நிலை ஓலி மொழியாதல் 
மொழியின் முதற்காரணமே ஒலிகள் தான் சிலவகை அசைவுகள் நம் செவிபுலனைத் தாக்கும்போது உணரபடுவதே ஒலியாகும் .இவ்வாறே மொழி உணரபடுகிறது. மொழி, பேசுவோரின் குரலில் பிறந்து, பொருளை உணர்த்தும் அறிகுறிகளாக அமைந்து, கேட்போரால் பொருள் உணரப்படும் ஒலிவகை எனலாம். மேலும் பேசுபவர், கேட்பவர் இருவருக்கும் இடையே ஒருவர் உணர்ச்சியையோ, கருத்தையோ மற்றவருக்கு உணர்வதற்குப பயன்படுகிறது. 

          இவ்வாறு பேசும்போது ஏற்படும் ஒலிகூட்டங்களில் உள்ள சிறு சிறு ஓலி துணுக்குகளை ஆராய்ந்து பாகுபாடு செய்து எழுத்துகள் என் வகுத்தனர் (எ கா) அ,ஆ இவை இவை செவியால் கேட்டு உணரப்படும் வரிவடிவங்கள் ஆகும். இவைகளை உயிர், மெய் என பிரித்து வகைபடுதியுள்ளனர். 

      "நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று குரல்வளையின் ஊடே புகுந்து வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் வரும்போது, வாயில் உள்ள நாக்கு, இதழ், அன்னம்,பல்,ஆகிய உறுப்புகளால் தடையுற்று வெளிபடுவதே எல்லா ஒலிகளும் பிறக்க காரணம்" என்று மொழிநூல் அறிஞர் புளும்பீல்டு கூறுகிறார். 

இவ்வாறு வெளிப்படும் ஒலிகளை வகைபடுத்தி எழுத்துகளை வரிவடிவில் கொடுத்த நம் மூத்த அறிஞர்கள் இல்லாவிட்டால் இன்றைக்கு நாம் நம் மொழியின் அடையாளங்களாக சொல்லிகொண்டிருகிரோமே சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் போன்ற நம் முன்னோர்களின்  வாழ்க்கை முறைகளை படம்பிடித்து காட்டும் பல இலக்கியங்களை அடையாளம் காண முடிந்திருக்காது. எனவே முதலில் அந்த மூத்த மொழிநூல் அறிஞர்களுக்கு வணக்கம் செலுத்துவோம். 

மொழியின் தற்கால நிலை 

       பேச்சு மொழி இன்று வட்டார வழக்குகளில் எப்படி பேசினாலும் எழுத்து மொழி வேறுபடுவதில்லை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். 
"மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும் எழுத்து இயல் திரியா என்மனார் புலவர்". 20 ( தொல்காப்பியம் மொழிமரபு ) 

         ஆனால் இன்று நாம் நம் வசதிகளுக்கு ஏற்ப எழுத்துகளையும் சுருக்கிகொண்டுள்ளோம் நம் முன்னோர்கள் சொன்ன பல கருத்துகளை ஒருவர் சொல்ல அது பல நபர்களை கடந்து நம் காதுகளுக்கு வரும் போது அதன் பொருள் மாறுபட்டு நம்மிடையே வந்து சேரும் இந்த திரிபுகளால் இன்று பல நல்ல விசயங்களை தவறாகவும் தவறான விசயங்களை நல்லது என்றும் நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

(உ.ம் ) "பந்திக்கு முந்து படைக்கு பிந்து" 

       இந்த பழ மொழியின் பொருள் போர்களத்தில் குதிரை படைகளை முதலிலும் அதன் பின் யானை படைகள் கடைசியாக வீரர் படைகளை அனுப்புவது முறை . ஆனால் இதன் பொருளை நாம் எப்படி பொருள் கொண்டுள்ளோம் சாப்பாடு பந்திக்கு முதலும் படைக்கு பிந்தியும் செல்லவேண்டும் என்று அவரவர் தேவைக்கு ஏற்ப மாற்று பொருள் கொண்டுள்ளோம் இவற்றை பற்றி நம் மொழி நூலார்கள் விளக்கமாக கூறியுள்ளனர் 

     மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது என்பதையும் காலபோக்கில் மொழி அடைந்த வளர்ச்சியையும் அதன் மாற்றங்களையும் பழ ஆசிரியர்களின் நூல்கள் மூலம் நம் அறியமுடிகிறது . பிற நாட்டவர் கலப்பினால் அவர்களின் கலாச்சாரம், உணவு, உடைகளை நம் பயன்படுத்துவதுபோல மொழியையும் அவர்களின் உச்சரிபுபோல உச்சரிக்க ஆரமித்ததின் விளைவு மொழி திரிந்தது. 

"நாலாம் தலைமுறையில் நாவிதனும் சித்தபனாவான் " ( பழமொழி) 



மனிதர்களின் உறவு முறைகளுக்கு மட்டுமல்ல மொழிக்கும் பொருத்தமானதுதான். 



மொழி கலப்பு: 
        நன்கு படித்தவர்கள் சொற்களை அழுத்தம் திருத்தமாக உச்சரிகிறார்கள். வடநாட்டினர் வருகையால் ஷா, ஹ ,ஜ, போன்ற வார்த்தைகளை நம் சுலபமாக பயன்படுத்த ஆரமிததால் நாம் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க ஆரமிதுவிட்டோம் இது நம் சொம்பேரிதனதால் உருவானதா அல்லது எளிமையாக சொல்வதாக நினைத்து பயன்படுதினோமா என்பதை மொழிநூலார் ஆராய்ந்துகொண்டு இருகின்றனர். 

மொழியின் எதிர்கால போக்கு 

           இன்று மொழியின் நிலை என்னவென்றால் சிறுக சிறுக குறைந்து அவரவர் வசதிக்கேற்ப சிதைந்து புது வடிவம் கொடுதுக்கொண்டிருகிறோம் இயந்திரமயமாகிவிட்ட இன்றைய நிலையில் இன்பங்களைகூட இணையதலதில்தான் பெறுகின்றனர். நேரம் குறைவாக இருப்பதால் பேச்சில் சுருக்கம் ஏற்பட்டது ' வந்து கொண்டிருகின்றேன் ' என்பதை 'வரேன் ' என்றாலே புரிந்து கொள்ளமுடிகிறது. எனவே நேரம் குறையும் போது வார்த்தைகளையும் குறைதுகொண்டிருகிறோம் . ஒரு முழு சாப்பாட்டை கையடக்க பையில் கொண்டு வந்ததுபோல மொழியை வாயிற்கு அடக்கமாக் கொண்டு வந்துள்ளோம். 

மொழியும் கால நிலையும் 

       பேச்சு உறுப்புகள் கால நிலைக்கு ஏற்ப ஒலிகளை வெளிபடுத்துவதில்  வித்யாசபடுகிறது   குளிர் பிரதேசத்தில் வாழகூடியவர்கள், வெப்பமான பிரதேசத்தில் வாழ கூடியவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப உணவு, உடை மாறுவது போல பேச்சும் மாறுபடுகிறது. 

" அடுத்த 100 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள பேச்சு மொழிகளில் 90 விழுக்காடு காணாமல் போய்விடும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 6,000 முதல் 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பூர்வீக குடிமக்களால் பேசப்படுகிறது. ஆனால் இவற்றில் பெரும்பான்மையான - 90 விழுக்காடு - மொழிகள் காணாமல் போகும் நிலையில் உள்ளன. ஏனெனில் மேற்கூறிய மொழிகளில் 4 விழுக்காடு மொழிகளே உலகம் முழுவதும் அதிகமாக - உலக மொத்த மக்கள் தொகையில் 97 % - பேசப்படுகிறது. மீதமுள்ள 96 விழுக்காடு மொழிகளும், உலகம் முழுவதும் 3 % மக்களால் மட்டுமே பேசப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த 100 ஆண்டுகளில் 90 விழுக்காடு மொழிகள் காணாமல் போய் விடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது " 

         எனவே இன்றைக்கு இயற்கையின் பேரழிவு ஏற்படக்கூடிய இடங்களில் இருக்க கூடிய மக்கள் பேசும் மொழிகள் அழிந்துவிடும் வாய்ப்பு  உள்ளது காரணம். நில நடுக்கம், கடல் சீற்றம், இவற்றால் பூகம்பம், சுனாமி, இவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு தீபகற்ப நாடுகளுக்கு புலம் பெயர்கிறார்கள், அங்கு வசிக்கும் மக்களுடன் பழகும் போது அவர்களின் மொழிகளை கற்றுகொல்கிறார்கள். 

          இவ்வாறாக நம் நாட்டிற்கு வரும்  பல  நாட்டு மக்களையும் இனம், மொழி, மதம் கடந்து சகோதரத்துவத்துடன் வாழ வைக்கும் நம் தாய் நாடும் ,தாய் மொழியும் என்றும் அழியா வரம்பெற்ற செம்மையான மொழி என்பதில் கடுகளவும் ஐயம் இல்லை. 

முடிவுரை : 
        நம் மொழியின் பெருமை உலகம் முழுவதும் பரவினாலும் நம் தாய் நாட்டில் சிறுமைப்பட்டு இருப்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை " நெய்தவன் சட்டை இல்லாமல் இருப்பது போல " மற்ற மொழி பேசுபவர் கொடுக்கும் மதிப்பை நம் தாய் நாட்டில் தமிழ் மொழிக்கு நாம் கொடுக்காதது வருத்ததிற்குரியது . தமிழில் படித்தவர்களை தொழில் கூடங்களிலும், கல்விகூடங்களிலும், பணியில் அமர்த்த யோசிக்கும் நிலை நம் நாட்டில் இருப்பதை நினைத்து வேதனையின் உச்சத்தில் இருந்தாலும் எங்கள் தமிழ்மொழியின் புகழ் பரப்ப ஒருபோதும் ஓய்ந்ததில்லை நாங்கள் " உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு " இனி ஒலிக்கட்டும் உலகமெங்கும் எங்கள் தமிழ். 

(தினகரன் செம்மொழி மலரில் வெளிவந்தது )

Wednesday, June 6, 2012

பண்டைய நாகரிகமும் இன்றைய மாற்றமும்










மனிதன் என்பவன் வளர்ச்சியடைந்த ஒரு விலங்கு என்பதே உண்மை
இன்றைக்கும் எத்தனை அறிவியல் வளர்ச்சியடைந்தாலும் நாகரிகத்தின்
 உச்சத்தில் இருந்தாலும் இன்னும் அவனுக்குள் ஒரு விலங்கின் குணம்
மறைந்து இருப்பதை நாம் உணருகிறோம் .
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் முதலில் மரத்திற்கு மரம் தாவியும்
தவழ்ந்தும் சென்றுகொண்டிருதவன் நடந்து சென்றால் என்ன ? என்று ஒரு
மாற்றத்தை தனக்குள் யோசித்ததால் மனிதன் ஆனான் .
இந்த மாறுதல்களும் தேடுதல்களுமே நாகரிகத்தின் முதல் படி ஆகும் .ஆரம்ப
காலத்தில் காடுகளில் திரிந்து உணவுகளை பச்சையாக சாப்பிட்டு கொண்டு
இருந்தவன் கற்களின் உராயவால் தீயை உருவாக்கினான் அதில் சமைத்து
சாப்பிட தொடங்கினான் .ஆடைகள் அணியாமல் சுற்றி திரிந்தவன் இலைகளை
ஆடைகளாக அணிய ஆரமித்தான் ,அதன் பின் இயற்கை விளைவுகளான
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கி நிற்க மரத்தின் நிழலையும் ,மலை
 குகைகளையும் நாடினான் பின்னாளில் அதுவே வீடு என்ற ஒரு அமைப்பு
உருவாக்க காரணமானது.
இவாறு தன் தேவையை உணர ஆரமிதத்தின் விளைவால் தேடுதலில்
ஈடுபட்டான்  தேடிய பொருள்களை காலம் கருதி சேமிக்க பழகினான் அதன்
பின் இயற்கையின் மாற்றங்களை உணர்ந்து அதற்க்கு தகுந்தால் போல தன்னை
மாற்றிக்கொள்ள முயன்றான். இதுவே மனிதனின் ஆரம்ப நிலை .
மேற்குறிப்பிட்ட அனைத்தும் அவனின் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான
தேடுதல்களின் மாற்றம் அதன் பின் அவன் தனது உள்ள தேவைகளை எவாறு
உணர்ந்தான் என்பதை பார்க்கலாம் .

மனிதன் தன் உள்ளத்தின் உணர்வுகளை முதலில் வெளிபடுத்த நினைத்தபோதுதான்
மொழி என்ற ஒரு அற்புதம் ஆரம்பமானது .
மனிதன் வேட்டையாட செல்லும் போது அவனை தாக்கிய விலங்குகளை கண்டு
பயந்தான் அந்த விலங்குகள் அங்கு இருப்பதை தனக்கு பின் வருபவர்களுக்கு
தெரிவிக்க நினைத்து விலங்கின் படத்தை வரைந்தான் குறியீடு மூலமாக அங்கே
விலங்கு இருப்பதை உணர்த்த நினைத்தான் இதுதான் குறியீடு (சிம்பல்ஸ்) என்ற
மொழியின் ஆரம்ப கட்ட நாகரிகம் ஆகும் . அதன் பின் மனிதன் தன் உள்ளத்து
உணர்வுகளை தன் எதிரில் இருபவர்களுக்கு கண் சாடை மூலமாகவும் ,கை
அசைவுகள் மூலமாகவும் உணர்த்த விரும்பினான்.

தாய் வழிசமூகம்
ஆண் பெண் படைப்பின் நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை உணர்ந்த மனிதன்
பெண்ணை தாய்மை அடைய செய்கிறான் அப்படி தாய்மை அடைந்த பெண்களை
வணங்க ஆரமித்தான் ஒரு குழுவாக சேர்ந்து ஆரமித்த மனிதனை தாய்மையடைந்த
பெண் அரவணைத்து வழிநடத்தி சென்றதால் அவளை தெய்வமாக வழிபட்டான் அவள்
இறந்த பின்னும் அவளின் பிரிவை தாங்கமுடியாத மனிதன் அவளின் நினைவாக
அவளை மண்ணில் புதைத்து அந்த இடத்தை கோவிலாக வணங்கினான் இதுவே கால
 போக்கில் சிறு தெய்வ வழிபாட்டுக்கு காரணமானது
இன்று பெண் தெய்வங்களை அம்மன் என்று பொதுவாக அலைகிறார்கள்
மழையை மாரியம்மனாகவும் அக்கினியை அக்கினி அம்மனாகவும் ,நீரை
கடலைம்மாவகவும் அலைகிறார்கள் ( காவேரி, வைகை ,கங்கை ,யமுனை )
என்று பெண் பெயர்களில் நதிகள் வர காரணம் இதுவே . தீமைகள் அளிப்பவளாக
காளியை வணங்குகிறார்கள் . 
தந்தை வழிசமூகம்
அதற்கடுத்து வந்த கால கட்டங்களில் ஆணாதிக்கம் தலை தூக்கியதால் தனகென்று
ஒரு பெண் எப்போதும் பணிவிடை செய்ய வேண்டும் என்று நினைத்த ஆண் திருமணம்
என்ற ஒரு பந்தத்தை உருவாக்கி  அதில் பெண்ணை அடிமை படுத்தினான் தான் மட்டுமே
அனைவரையும் காக்கும் கடவுளாக இருக்க வேண்டும் என்றும் அவனை கண்டு அனைவரும்
பயப்பட வேண்டும்  வணங்க வேண்டும் என்று நினைத்தால் இன்றைக்கு இருக்கின்ற காவல்
 தெய்வங்களான அயனார் ,கருப்பசாமி போன்ற தெய்வங்கள் ,
மேலும் தன் திருமண வாழ்வின் இன்பத்தையும் குழந்தை பேறு இவற்றை அனுபவித்தவன்
கடவுளையும் தன்னை போல் எண்ணியதன் விளைவு சிவன் பார்வதி அவர்களின் மகன்கள்
முருகன் விநாயகர் போன்ற தெய்வங்கள் இங்கேயும் அவனின் ஆணாதிக்க சிந்தனை
மேலோங்கி இருக்கிறது
இரண்டும் ஆண் மக்கள் பெண் மகளை பற்றிய செய்தி குறைவு அதன் பின் தன் இன்பத்திற்காக
பல பெண்களை அடிமைபடுத்தி இன்புற்றான் ஒன்றுக்கு மேற் பட்ட தீர்மானங்களை செய்தான்
 அதற்க்கு சான்றாக முருகன் வள்ளி தெய்வானை , பெருமாள் ,பூதேவி சீதேவி என்று இரண்டு
மனைவி கொண்ட கடவுளர்களை வழிபட்டு அதை நடைமுறை படுத்தினான்.
இவாறு மனிதன் மனிதனை அடக்க நினைத்ததின் விளைவு போர் என்ற ஓன்று உருவாக
காரணமாயிற்று அதன் பின் தான் வாழ்ந்த இடத்தில தன்னை விட எளிய உயிரினமான
ஆடு மாடுகளை அடிமை படுத்தி தனக்கு சாதகமான வேலைகளை கொடுத்தான் பொத்தி
சுமத்தல் போன்ற வேலைகளை தந்தவன் அதன் பின் பசி பட்டினி இயற்கையின் சீற்றம்
காரணமாக உண்ண உணவு இல்லாத சூழலில் ஆடுகளை கொன்று அவற்றை உணவாக
உட்கொண்டான் இதுவே பின்னாளில்  மாமிச பிரியனாக அவனை உருவாக்கியது
மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது நிலையான "ஆயர் நிலை" இவ்வாறு
 எய்தப்பட்டது. முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன்
 முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்ப
முறை ஆகியவை உருவாயின. சமுதாயத்தின் இரண்டாவது வளர்ச்சி நிலை இது.
காதல் மணம், மணச்சடங்குகள் இன்மை (புலிப்பல் தாலி, தாழையுடை தவிர) ஆகிய
தன்மைகளைக் கொண்டதும், "களவு" என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை
 மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு" மணம் ஏற்பட்டது.
தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தை வழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது.
 காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம்
காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய
 குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்" ஆனான். தமிழகத்தில் இவ்வாறு அரசன்
 உருவானான் என்பதைக் காட்டும் சொல், "கோன்" (கோன் - இடையன், அரசன்; இடைச்சி -
ஆய்ச்சி, அரசி). ஆடு, மாடு மேய்க்க உதவும் "கோலே" பின்னாளில் அரசனின் "செங்கோல்" ஆயிற்று.
அதன் பின் மாடுகளை , மரங்களை கொண்டு வண்டி செய்து எடையுள்ள பொருள்களை அதில்
ஏற்றி வேவ்வேறு இடங்களுக்கு சென்றான் இன்று car என்ற நான்கு சர்க்கார வாகனம் உருவாக்க
 அதுதான் காரணம் .
இவாறு மனிதனின் ஆழ்மனம் மாற்றத்தை விரும்பியத்தன் விளைவு   இன்று பல கட்டிடங்களும்
சொகுசு பேருந்துகளும் , விமானங்களும் மின்சார ரயில்கள், ராக்கெட்டுகள் என்று நீண்டு கொண்டே
 போகிறது ஆனாலும் நம்மால் இன்னும் மாற்றமுடியாத விசயங்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறது
இயற்கை கடவுளர்கள்
கடவுளின் தோற்றம் 
மனிதன் உருவான ஆரம்ப கால கட்டத்தில் அவன் தன்னைவிட சிறந்த ஓன்று உலகில் இல்லை
என்ற கர்வத்துடன் நடமாடிகொன்றிந்தான் . விலங்குகளை வேட்டை ஆடியும் மரம் செடிகொடிகளை
 அழித்தும் இயற்கையை பாழ்படுத்தி மகிழ்ந்து இருந்த நேரத்தில் முதல் முறையாக அவன் பார்த்து
பயந்தது இயற்கையின் அதிசயமான தீயை.
அக்கினி கடவுள் 
அக்கினி கடவுள் எவ்வாறு உருவானார் என்று பார்த்தால் காட்டில் மரங்கள் ஒன்றோடு ஓன்று
 உராய்ந்ததால் ஏற்பட்ட தீ சருகளில் வேகமாக பரவி காட்டு தீ உருவானது அதன் வெப்பத்தையும்
அக்கினி சுவாலையையும் கண்டு மனிதன் மிரண்டு போனான் தன்னால் தொடமுடியாத கட்டுபடுத்த
முடியாத அக்கினியை கண்டு பயந்து அதை வணங்க ஆரமித்தான் .

வாயு பகவான் 
அக்கினியை கண்டு வணக்கியவன் அதன் பின் வேகமான காற்று சூறாவளியாய் சுழன்று மரம் செடி
 கொடிகளோடு மனிதனையும் சுழற்றி வீசியபோது  காற்றை கண்டு பயந்து தன்னால் அதை ஒன்றும்
செய்ய முடியாது தன்னை மீறிய சக்தியாக இருக்கிறது என்று உணர்ந்தவன் காற்றை  வாயுவாக
வணங்க ஆரமித்தான்.
வருண பகவான் 
காற்றின் வலிமையை உணர்ந்தவன் அதன்பின் மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கையும் அதனால்
கடலின் கொந்தளிப்பையும் கண்டு மிரண்டான் மழையின் இடைவிடாத சீற்றத்தில்  மூழ்கிப்போன
பூமியை கண்ட பின் தன் கர்வதைஎல்லாம் உள்ளே புதைத்து வானை நோக்கி கையெடுத்து வணங்கி
என்னை காப்பாற்று என்று கதறினான் அதன் பின் இயற்கை தன் சீற்றத்தை குறைத்து இயல்பு நிலைக்கு
வந்ததால் அவர்களை மனிதன் வணங்கினான் .
இவ்வாறுதான் முதலில் இயற்கையின் வடிவமாகிய நீர் நிலம் காற்று என்பனவற்றை முறையாக
அக்கினி , வாயு,வருணன் என்று வணங்க ஆரமித்தான் இதற்கான சான்று நம்முடைய பழமையான
 வேதங்களாகிய ரிக், யசுர், சாம , அதர்வண வேதங்கள் குறிப்பிடுகின்றன தொல்காப்பியர் எழுதிய
"தொல்காப்பிய நூலில் பொருள் அதிகாரத்தில் கருப்பொருள் என்னும் பகுதியில் இந்த தெய்வங்கள்
மக்களின் வாழ்க்கைமுறை பற்றி விரிவாக எழுதிருக்கிறார் மேலும்
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே” ( மாணிக்கவாசகர் - திருவாசகம் )
"தெய்வம்
நன்மை தீமை அச்சம் சார்தல் என்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்
கொள்ளும் என்ப குறி அறிந்தோரே. " (தொல்காப்பியம் - பொருள்)
மரமான கடவுள் 
இயற்கையின்அதிசயமான மரங்களை கடவுளாக மனிதன் இன்னும் பூசிக்கிறான் அதற்க்கு
காரணம் மழைக்கு வெயிலுக்கும் காற்றுக்கும் பயந்து அவன் ஒதுங்கியபோது அவனை தன்
குடை  நிழலின் கீழ் அரவணைத்து பாதுகாத்து மரங்கள் . விலங்குகள் தாக்கும் போது மத்தின்
 மீது ஏறி அமர்ந்து தன்னை காதுகொண்டான் அதனால் மரங்களை தெய்வமாக வணங்கி
தன் நன்றியை தெரிவித்தான் இதன் விளைவால் பின் நாளில் மரத்தின் மீது ஒரு
இருப்பிடத்தை உருவாக்கினான் அதுவே இன்று வீடு என்ற ஒரு அமைப்பு உருவாக்க காரணமானது
நாகரிக வளர்ச்சியில் கடவுள்கள்




மனிதன் தன் உள்ள உணர்வுகளை வெளியே சொல்ல நினைத்ததின் விளைவாக மொழி என்ற ஒரு
சிறப்பு உருவானது மொழியின் ஆரம்ப நிலையான குறியீடுகள்  மூலமாக தன் மனதில் உள்ளதை
 மற்றவருக்கு தெரிவிக்க நினைத்தான்.இதை சிந்துசமவெளி நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சிகள்
குறிப்பிடுகின்றன  அதன் பின் மாற்றத்தை விரும்ப நினைத்த மனிதன் மரத்தை விட்டு அதிக
பாதுகாப்பு கருதி மலைகளை குடைந்து அதில் தன் இருப்பை நிலை நிறுத்தினான் இதுவே பிற்
காலத்தில் மாமல்லர்களின் குகை கோவில்களும் சோழர்களின் தஞ்சை பெரிய கோவிலும்
உருவாக்க காரணமாக இருந்தது.
அதன் பின் காலப்போக்கில் தன்னுடைய இருப்பிடத்தை விட உயர்ந்த ஒன்றில் கடவுளை வைக்க
 நினைத்த மனிதன் அதற்க்கு ஒரு உருவம் கொடுக்க நினைத்தான் அவனின் கற்பனை உருவமே
 அவனை  விட எல்லாவற்றிலும் உயர்ந்த தன்னை ஒத்த உருவத்தை கொடுத்தான் அதன் பின்
உயர்ந்த இடத்தில பாதுகாப்பாக கடவுளை வைக்க நினைத்து தன் வசிப்பிடம் போன்று முதலில்
உருவாகினான் காலப்போக்கில் மாடக்கோவில் யானை கோவில் கொகுடிகொவில் மணிகோவில்
என உயர்ந்த கட்டிடங்களில் இறைவனை அமர்த்தி அழகு பார்த்தான் .இதை அதர்வண வேதமும் ,
அர்த்த சாஸ்திரமும் , வான நூலும் குறிப்பிடுகிறது.
இன்று நம் வாழ்க்கை முறைகளை போல கோவில்களையும் டைல்ஸ் மார்பிள்ஸ் போன்ற அழகு
கற்களால் அலங்கரிக்கிறோம். ஆனாலும் இன்னும் கூரை வேய்ந்த கோவில்களும் சுடுமண்
கோவில்களும் இருகின்றன எ.கா  நெல்லை மாவட்டத்தில் பச்சை நாயகியம்மன் கோவில்
கூரைவேய்ந்த கோவிலாக இன்றும் காணப்படுகிறது.














ஆண் பெண் படைப்பின் நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை உணர்ந்த மனிதன் பெண்ணை
தாய்மை அடைய செய்கிறான் அப்படி தாய்மை அடைந்த பெண்களை வணங்க ஆரமித்தான்
ஒரு குழுவாக சேர்ந்து ஆரமித்த மனிதனை தாய்மையடைந்த பெண் அரவணைத்து வழிநடத்தி
சென்றதால் அவளை தெய்வமாக வழிபட்டான் அவள் இறந்த பின்னும் அவளின் பிரிவை தாங்க
முடியாத மனிதன் அவளின் நினைவாக அவளை மண்ணில் புதைத்து அந்த இடத்தை கோவிலாக
வணங்கினான் இதுவே கால போக்கில் சிறு தெய்வ வழிபாட்டுக்கு காரணமானது
இன்று பெண் தெய்வங்களை அம்மன் என்று பொதுவாக அலைகிறார்கள்
மழையை மாரியம்மனாகவும் அக்கினியை அக்கினி அம்மனாகவும் ,நீரை கடலைம்மாவகவும்
 அலைகிறார்கள் ( காவேரி, வைகை ,கங்கை ,யமுனை )என்று பெண் பெயர்களில் நதிகள் வர
 காரணம் இதுவே . தீமைகள் அளிப்பவளாக காளியை வணங்குகிறார்கள் .
அதற்கடுத்து வந்த கால கட்டங்களில் ஆணாதிக்கம் தலை தூக்கியதால் தனகென்று ஒரு பெண்
எப்போதும் பணிவிடை செய்ய வேண்டும் என்று நினைத்த ஆண் திருமணம் என்ற ஒரு பந்தத்தை
 உருவாக்கி  அதில் பெண்ணை அடிமை படுத்தினான் தான் மட்டுமே அனைவரையும் காக்கும்
கடவுளாக இருக்க வேண்டும் என்றும் அவனை கண்டு அனைவரும் பயப்பட வேண்டும் 
வணங்க வேண்டும் என்று நினைத்தால் இன்றைக்கு இருக்கின்ற காவல் தெய்வங்களான அயனார் ,
கருப்பசாமி போன்ற தெய்வங்கள் ,
கடவுளும் உளவியலும்
சங்க காலம் என்று அழைக்கப்பட்ட இடைக்காலத்தில் பல பக்தி இலைக்கியங்கள் தோன்றின
 இதற்க்கு காரணம் மொழியின் உச்சகட்ட வளர்ச்சி . தன் உள்ளத்தில் கடவுளை உணர ஆரமித்தான் 
தன் வாழ்வில் நடக்கும் அணைத்து நல்ல செயல்களுக்கும் தன்னை மீறிய சக்தியான கடவுள் தான்
காரணம் என்று எண்ணி கடவுளை காதல் செய்தான் அன்பு பாராட்டினான் இதில் அவரவர் வாழ்க்கை
முறைகேர்ப்ப கடவுளின் உருவங்களும் அமைத்து வழிபட்டனர் சமணர்கள் வருகையால்  சைவம்
வைணவம் இரண்டு பக்தி மார்க்கம் விரைவாக பரவியது . அதற்க்கு முன் உள்ளம் பற்றிய
உளவியளாரின் கருத்தை நாம் பார்க்க வேண்டும் .
 இந்த கருத்தை நாம் நிச்சயம் மறுக்க மாட்டோம் அனைவரின் மனதிலும் ஆசைகள் புதைந்து
 கிடக்கிறது அதிலும் நிறைவேறாத ஆசைகள் நிறையவே இருகின்றன அதனால் ஏற்படும்
விளைவே இன்றைய சமூக சீர்கேடுகளுக்கான அடிப்படை ஆகும் எனவே வெளிப்படையாக
இருங்கள் மனதில் இருப்பதை மறைத்து போலியாக இருப்பதை மாற்றுங்கள் அறிவியல்
வளர்ச்சி என்பது மனிதனுக்கு நன்மை செய்யும் விதத்தில் இருக்க வேண்டும் ஆனால்
தீமைகள் தான் அதிகமாகி கொண்டு இருகின்றது. இதை தடுக்க வேண்டும்.
என்றும் மாறாதவை 
அம்மா அப்பா என்ற உறவுமுறைகள் இன்றும் மாறாத ஒன்றுதான் இறப்பும் பிறப்பும் இன்னும்
 மாறவில்லை அதே போன்று நாம் சுவாசிக்கும் முறைகள் நம் உடல் கூறுகள் இவை அனைத்தும்
 முழுமையாய் மாறவில்லை உண்ணும் உணவில்கூட பெரிதாய் மாற்றம் இல்லை .மேலும்
கடவுளரை வணங்கும் நிலை ஆதிமுதல் இன்று வரை தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கிறது.
கடவுளரின் உருவங்களும் இருப்பிடங்களும் கால சூழல்களுக்கு  ஏற்ப மாறுபட்டாலும் நம்பிக்கைகள்
இன்னும் மாறவில்லை.காரணம் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்ற மனிதனின் நம்பிக்கை தான்.














அன்பை நோக்கி பயணம்
எத்தனை சாதனைகள் புரிந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும் எல்லாரும் கடைசியில் அன்பை
 தேடித்தான் அலைந்துகொண்டிருகிறோம் இன்று அலைபேசி வாயிலாகவும் , மின்னஞ்சல்
 மூலமாகவும் முக நூல் மூலமாகவும் உலகின் ஏதோ ஒரு மூளையில் இருந்து கொண்டு
 ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு பேசுகிறோம் எதற்காக உலக வளர்சிககவா? நாட்டின்
 நன்மைககவா ? இல்லை மனதிற்கு சந்தோசத்தை தரும் , ஆறுதல் வார்த்தைகளை சொல்லும்
 அன்பான உள்ளம்கொண்ட நண்பர்களையும் காதலர்களையும் , அன்பானவர்களையும் தேடித்தான்
 அந்த பயணம் செல்கிறது என்பதை மறுக்க இயலாது. இதை முழுமையாய் அறியாததால் தான்
 நமக்குள் பொறாமை ,பகை , போன்ற தீய எண்ணங்களை வளர்த்துகொண்டு ஒருவரை ஒருவர்
 அழித்து கொண்டு இருக்கிறோம் இன்னும் நமக்குள் ஒருவரை ஒருவர் அடிமை செய்வதும் மீண்டும்
விலங்கு நிலைக்கு மாறிக்கொண்டு இருக்கிறோம் எனவே மனிதனை மனிதனாக மதியுங்கள்.
.
முடிவுரை 
எனவே பண்டைய நாகரிகம் முதல் இன்றைய நாகரிக மாற்றங்கள்  வரை இன்னும் மாறாத
ஓன்று தேடல். இது  மனிதனின் மனதை தேடும் ,அன்பை தேடும் தேடல் தான் எனவே
 ஒருவருக்கொருவர் அன்பாய் இருந்து ஒற்றுமையான ஒரு சமூதாயத்தையும் மனித நேயமிக்க
 ஒரு உலகை உருவாக்குவோம் அறிவியலின் வளர்ச்சி நல்லதை ஆக்குவதற்காக இருக்கட்டும்
 தீமைகளை அழிபதற்காக இருக்கட்டும் .