Tuesday, June 26, 2012

பெண்ணியம்



நாகரீகம் வளர்ச்சியடையாத அன்றை காலத்தில் திருமணம் என்ற முறை இல்லை. தனிமனிதன் தன்னை போன்றவர்களுடன் இணைந்து ஒரு கூட்டமாக வாழ்ந்தபோது இன்றைக்கு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத மேலை நாட்டுக் கலாச்சாரமாகிய ஒருவனுக்கு ஒருத்தி என்றில்லாமல் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் விருப்பபட்டவருடன் இணைந்து வாழும் வாழ்க்கை முறையை மேற்கொண்டனர்.

பெண் தாய்மையடைவதால் சிறப்பானவளாகக் கருதப்பட்டாள். கூட்டத்தில் உள்ளவர்களை அரவணைத்து வழிநடத்தும் தலைமை பொறுப்புடையவளாக பெண் இருந்தாள். மேலும் ஒரு எல்லைக்குள் இருப்பவர்கள் வேறு ஒரு கூட்டத்தார் வசிக்கும் எல்லைக்குள் சென்றால் பாதுகாப்பு கருதி அவர்களை கொல்லக்கூடத் தயங்கமாட்டார்கள். அப்படிபட்ட சூழ்நிலையில் கூட்டத்தில் வயதுமுதிர்ந்த பெண்மணி சமாதான பேச்சுக்காக அந்த இனத்தவர் வசிக்கும் 
இடத்திற்கு செல்வாள்.


வயதான பெண்ணை அந்த இனத்தவர் கொல்ல நினைப்பதில்லை. காரணம் அவள் அன்பு அரவணைப்பு கொண்ட தாய்மைப் பேறுகொண்டவள். அவளால் அவர்களுக்கு தீங்கு நேராது என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகவே ஆரம்பத்தில் பெண் தலைமைப் பொறுப்பேற்று தன்னுடைய குழுவிலுள்ளவர்களைப் பாதுகாத்தாள்.

அதன் பின் ஆண் உணவு தேடும் பொருட்டு வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடிவிட்டு களைப்புடன் திரும்பும் அவன் தாகத்துக்கு தண்ணீர் கேட்கவோ, அவனின் தேவைகளைக் கேட்கவோ தினம் ஒருவரை எதிர்பார்க்க வேண்டியிருந்தது.


அவனின் உடல் சோர்ந்த நிலையில் தோள் சாய அவனின் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற உரிமையுடையவளாக ஒரு உறவுக்காக பெண்ணைச் சொந்தமாக்கிக் கொள்ள மனம் ஏங்க ஆரம்பித்ததன் விளைவாக திருமணமுறை உருவானது.

திருமணத்தின் பிறகு ஆண்தான் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவளோடு குடும்பம் நடத்துவான். பெண்ணின் வீட்டில் பணிவிடைகள் செய்வான். இந்த சூழலில் ஒடுங்கிய அவன் மனம் குரூரமாக சிந்திக்கத் தொடங்கியது. ஆண் பெண் என்ற வேறுபாடு வலுப்பெறத் தொடங்கியது. தன்னுடைய இனத்தில் உள்ள ஒருவன் தலைவனாக இருந்தால்தான் தன்னுடைய ஆசைகளை, தேவைகளை சுதந்திரமாக செய்யமுடியும் என்ற எண்ணம் 
தோன்றியது முதல் பெண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டது.



அதற்குப்பின் வந்த காலக்கட்டங்களில் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் தனக்கு சொந்தமாக்கிகொள்ளலாம். ஆனால் பெண் அவ்வாறு செய்ய இயலாது என்ற விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினான். பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்.

தொல்காப்பியம் நமக்கு கிடைத்த பழைய நூல்களில் ஒன்று. அதில் கூட பெண் என்பவள் இப்படி இருக்க வேண்டும் என்று விதிகளை சொல்லுகின்றார். அகத்திணையில் வரும் ஐந்திணைகளில் வாழும் மக்களின் குணங்களை அவர்களின் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு சொல்லும் போது தலைவன் போருக்காக வெளியே சென்று பல மாதங்கள் தங்கிவிடுவான். 
அந்த சூழலில் தலைவி தலைவனை நினைத்து உருகிக்கொண்டிருக்க வேண்டும். வழி மீது விழியை வைத்துவிட்டு மனதை தலைவன் போன இடத்துக்கே அனுப்பிவிட்டு மற்றவர்கள் பார்த்துவிடாத வண்ணம் தன் உடலை பேணாமல் உண்ண மறந்து, உறங்க மறந்து, அலங்காரம் இல்லாமல் பசலை 
பாய்ந்து உடல் மெலிந்து அவள் இருக்க வேண்டும். 

ஆனால் அங்கே போர் நிமித்தமாகவோ, கல்விக் கற்றும் பொருட்டோ, தூது சொல்லவோ சென்ற தலைவன் தலைவியின் பிரிவுத்துயர் தாங்காமல் 
தன் உடலை பேணி மற்றப்பெண்களை மயக்கும் வண்ணம் திடமாக உடலை வளர்த்து தன்னுடைய உடல்பசியைக்கூட அடக்க முடியாமல் பெண்களிடம் செல்கிறான். தலைவனின் உடல்பசியை போக்கிய அந்த பெண்ணை பரத்தை என்று கூறி ஒழுக்கநிலை தவறியவள் என்று தூற்றி, ஒதுக்கி வைத்த சமூகம் 
அவளிடம் சென்ற தலைவனை மட்டும் போற்றி புகழ்பாடி பரணிபாடுகின்றது. ஆண்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட பெண்ணை வீட்டுக்குள் ஒழித்து வைத்து விட்டு தங்களுடைய ஆசைகளை தீர்த்துகொள்ள அங்கீகாரத்துடன் உருவாக்கியதுதான் தாசி என்ற ஒரு பிரிவுப் பெண்கள்.


பிற்காலத்தில் தாசி வேசியாக மாறி இன்று விபச்சாரியாக உருவெடுத்து பெரும் சர்ச்சைக்குரியவர்களாக இருக்கிறார்கள். இந்த பெண்கள் தாங்கள் செய்வது தவறல்ல, இது ஒரு தொழில் என்றும் கூறுகின்றனர். ஒரு வகையில் யோசித்து பார்த்தால் சரி என்றுதான் தெரிகிறது. பண்டமாற்று முறை மாதிரிதான் இதுவும. இவனுக்கு உடல் சுகம் தேவை, அவளுக்கு பணம் தேவை. இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு இல்லை. ஆனால் இருவரும் இணைந்து செய்யும் தொழிலில் இன்பம் மட்டும் அவனுக்கு துன்பமும், தூற்றுதலும் 
அவளுக்கு. இது என்ன நியாயம்?


அன்று படிப்பறிவில்லாதவர்கள் பலர் இருந்தனர். அதனால் பகுத்தறியத் தெரியாததால் மற்றவர் சொல்லை அப்படியே நம்பி அதை வழிநடத்தினார்கள். ஆனால் இன்று படிப்பறிவும், பகுத்தறிவும் இருந்தும் நாம் இப்படி இருக்க என்ன காரணம் யோசித்து பாருங்கள்.

பலர் பண்பாடு என்ற போர்வையைப் போர்த்திகொண்டு மறைவில் ஒழுகுகின்றனர். சிலர் கலாச்சாரம் என்ற திரைக்கு மறைவில் இருந்து கொண்டு சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள் முன் ஒழுக்கம் என்றால் ஒருவனுக்கு ஒருத்தி, கலாச்சாரம் என்றும் ஆணுக்குப் பெண் அடிமை என்றும் போதித்துக் கொண்டு இருக்கின்றனர். இங்கு இவை பெண்களுக்கு மட்டுமே போதிக்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.

பெண்கள் கண்ணகியாய் கற்பு நெறியில் வாழவேண்டும் என்று சொல்கிறார்களே தவிர ஆண்களிடம கோவலனாக வாழக் கூடாது என்று வலியுறுத்துவதில்லை ஆண் பிள்ளையை குழந்தைப் பருவத்தில் 
இருந்தே கட்டவிழ்த்து சுதந்திரமாக வளர்க்கிறோம். அவனின் எந்த செயலையும் தட்டிக்கேட்பதில்லை வளரும் பருவத்தில் வயதுக்குரிய பால் கவர்ச்சியின் காரணமாக அவன் உணர்ச்சிவயப்பட்டு செய்யக்கூடிய செயல்களை கவனிப்பதில்லை. அரும்பும் போது கண்டும் காணாமல் விட்டுவிட்டு அவனுள் வக்ரம் மரமாக வளர்ந்தபின் வெட்டமுடியாமல் கவலைப்படுவதில் பயனில்லை.

இன்று பால் உணர்வைத் தூண்டக் கூடிய பத்திரிக்கை, படங்கள், வீட்டிற்குள்ளேயே வந்து போதிக்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துதுள்ளது. அதில் உள்ள நல்ல விஷயங்களைவிட நமக்குப் 
பாதிப்புகளைத் தரக்கூடிய விஷயங்களை விரும்பித் தேடுகிறோம். குழந்தைகள் தவறு செய்யும் போது ஆரம்பத்தில் விட்டுவிடுகிறோம். பின் நம்முன்னால் நடக்காதவரை பரவாயில்லை என்ற நிலைக்கு 
வந்துவிடுகிறோம்.

ஆனால் பெண்குழந்தையை ஆரம்பத்தில் இருந்தே பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வளர்ப்பதாக எண்ணி கோழையாக வளர்த்து விடுகிறோம். இந்த வளர்ப்புமுறையில் வித்தியாசப்படுத்துவதால்தான் இன்றைக்கு
பத்திரிக்கைகளில், செய்திகளில் அதிகமாக பாலியல் வன்முறைகளைப் பற்றிய செய்திகள் அதிகரித்து வருகின்றன.

பெண்ணை எவ்வளவுக் கட்டுப்பாடாக வளர்க்கிறோமோ அதில் கால் பங்கு அக்கறையை ஆண் குழந்தைகள் மீது செலுத்தினோமானால் இந்த வக்கிரங்கள் குறையும். 'கற்பு பறிபோய் விடும் கவனமாகப் பார்த்துக்கொள்' என்று வலியுறுத்துபவர்கள், அதைப் பறிப்பவர்களிடம் பறிப்பது தவறு என்று வலியுறுத்த ஏன் மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.

தவறு என்று நாம் எதைச் சொல்கிறோம்? இரு உடல் இணைவதையா? இல்லை இரு உள்ளங்கள் இணைவதையா? மனம் பொருந்தாக் காதலையும், காமத்தையும் தவறு என்கிறோம். அப்படியானால் நம்மில் எத்தனை பேர் மனம் பொருந்தி வாழ்கிறோம்? நம் மனதின் ஆழத்தில் சென்று உண்மையறிந்தோமானால் ஒருவரும் மனம் பொருந்திக் காலம் முடியும் வரை வாழ்வதில்லை என்ற உண்மைப் புரியும்.

காதல் இயற்கை தரும் இன்பம். கடைசிவரை காதலுடன் இணைந்தால் இன்பமாகத்தான் இருக்கும். ஏன் இன்பமாக இருக்கிறது என்று பார்த்தால் - அங்கு நீ , நான் என்ற போட்டி இல்லை. இருவரும் சமம், அன்பை விதைத்தால் அன்பைப் பெற முடியும், அடிமைத்தனத்தை விதைத்தால் அதையே அறுவடை 
செய்ய இயலும். எதைக் கொடுக்கிறோமோ அதை வாங்குகிறோம். அதனால்தான் காதல் இன்பமாக இருக்கிறது. 

ஆனால் திருமணம் என்ற பந்தம் பெணணின் சுதந்திரத்தைப் முழுமையாக பறித்துவிட்டு ஆணின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆயுள் முழுமைக்கும் போடப்பட்ட ஒப்பந்தப் பத்திரம். அதில் பெண் தன் ஆசை விருப்பங்களைப் புதைத்துவிட்டு இயந்திரம் போல செயல்படும் கட்டாயத்துள் திணிக்கப்படுகிறாள்.

இன்று காதலிக்கும் பெண்கள் குறிப்பிட்ட காலம் வரை இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஆணும் பெண்ணும் உடலால் இணையும் வரை அந்த இன்பம் நீடிக்கின்றது. இணைந்த பின் ஆண் மகிழ்ச்சியாக இருக்கிறான் ஆனால் பெண் அவமானத்தால் கூனிக் குறுகிபோய் விடுகிறாள். இந்த வேறுபாடு எதனால் வருகிறது என்றால் பெண்ணின் குழந்தை பருவம் முதல் அவளுக்கு கற்பு பற்றிய போதனைகள் போதிக்கப்பட்டு ஆழமாக அவளின் மனதில் விதைக்கப்படுகின்றன. ஆண்பிள்ளைகள் அவ்வாறு வளர்க்கப்படுவதில்லை.

பெண் பட்டங்கள் படித்து பாரினில் சென்றாலும் அவள் குடும்பம் என்ற கூரைக்குள் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். பெண்கள் புலம் பெயர்ந்த நிலையில் தங்களுடைய கல்வியின் மூலமாக உயர் பதவி வகித்தாலும், அலுவலகங்களில் ஆண்களுக்கு மேலே வேலை செய்யும் போது ஆண்களின் பொறாமையால் பல அவதூறுகளுக்கு ஆளாகிறாள். திருமணமான பெண் வீட்டில் கட்டுப்பாடுளை களைய முடியாமல் இந்த சமுதாயம் வகுத்த கோட்பாடுகளுக்குள் சிக்கி வெளிவரமுடியால் தவிக்கிறாள்.

திருமணமாகாத பெண் சமூகத்தில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவளை பெருமையுடன் பார்க்ககூடிய நிலையில் இந்த சமூகம் உள்ளதற்கு மாறாக அவளை குறைக்கூறிக்கொண்டு இருக்கிறது. இதில் ஆண்களை மட்டும் சொல்லவில்லை, சில பெண்களையும்தான். காரணம் உளவியல் ரீதியாக 
சொல்வோமானால் ஒருவரை துன்புறுத்தும் போது அவர்கள் மனதளவில் ஒடுக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டு அந்த காயத்தின் தழும்பு ஆறாத வடுவாக அவர்களின் மனதில் பதிந்துவிடுகிறது. பின்னாளில் தான் அனுபவித்த வேதனையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற குரூர மனம் வெளிப்பட்டு அதன்விளைவால் பல மருமகள்கள் கொடுமைக்கு ஆளாவதை இன்றும் நாம் காணலாம். ஆக இதில் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்ட மனம் ஆக உருவாகிறது. அதன் விளைவாக இன்று 
நம்மில் பலர் துன்பங்களை அனுபவிக்கின்றோம்.


எனவே இன்று பெண் திருமணம் என்ற பந்தத்தை வெறுக்க சில ஆண், பெண்களின் விரும்பத்தகாத செயல்களே காரணம். ஆண்களின் ஆதிக்கத்தால் பெண் ஆண் சமுதாயத்தையே வெறுக்கும் சூழல் இன்று நிலவி வருகிறது. உதாரணமாக தீவிரவாத பெண்ணியம் அதிகரித்து வருகிறது. மேலும் 
ஆண்களுடனான உடல் உறவுகளை பெண் வெறுக்க ஆரம்பித்துவிட்டாள். காரணம் திருமணத்திற்கு முன் இருவரும் இணையும் போது பெண் மட்டும் கருத்தரிக்கிறாள். பெண்ணை தவறான காரியம் செய்துவிட்டாள் என்று ஒதுக்குவதால் பெண் ஆணுடன் சேருவதை தவிர்த்து விட்டு பெண் 
பெண்ணுடனேயே சேருகின்ற நிலை வந்துவிட்டது.

இது இன்று சர்ச்சைகுறிய விசயமாக இருக்கிறது. உண்மையில் எல்லா இடங்களிலும் மறைமுகமாக நடந்து கொண்டிருந்த உறவு இன்று பகிரங்கமாக ஒத்துகொண்டு செய்யக்கூடிய அளவில் உருவெடுத்துகொண்டதால் உயிர் உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும் ஆண் பெண் உறவில் விரிசல் உருவாகிவிட்டது. உயிர் உற்பத்தி நின்றுவிட்டால் இந்த உலகம் எப்படி நிலைப்பெறும்?

எனவே கொஞ்சம் சிந்தியுங்கள். இன்று பெண்ணுக்கு எதிரி ஆண் என்றும் பெண் என்றும் பிரித்து கூறவில்லை. இருவரும் இருவருக்கும் நன்மைகளும் செய்கிறோம், தீமைகளும் செய்கிறோம். ஒருவரின் தேவை மற்றொருவருக்கு தேவைப்படுகிறது என்கிறபோது இடையே எதற்கு இந்த பிரிவினை பேதம்? எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாத 
உணர்வுகளோடு உறவாடும் உயிர்களாக உலாவந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைக்கையில் இன்பமாய் இருக்கிறது. அந்த சூழுல் உருவானால் நாளைய உலகம் யுத்தகளமாக இல்லாமல் பூக்கள் பூக்கும் நந்தவனமாக இருக்கும்.

பெண்ணியம் என்ற தலைப்பில் ஆணைப்பற்றிய கருத்து எதற்கு என்று எண்ணம் வேண்டாம். இது வரை பெண்ணை பற்றி கூறி நம்முடைய சிறப்புகளை எடுத்து சொன்னாலும் பெண்ணியம் என்றாலே பெண்களை பற்றிய வருணனைகள், மிதவாத பெண்ணியம், தீவிரவாத பெண்ணியம் என்று, நமக்கு என்று தனி உலகம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு, ஆண்கள் மீது குற்றம் சுமத்துவது என்ற கொள்ளைகளில் இருந்த மாறுபடுங்கள்.

நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ வேதாந்தம் சொல்வதாக நினைக்கவேண்டாம். நம்மால் எதை செய்ய முடியும், நம் சக்திக்கு தகுந்தது என்ன என்பது கண்டிப்பாக நமக்குத் தெரியும். அதை விட அதிகமாக வரும் போது அதைத் தவிர்க்க வேண்டும், நம்மில் எத்தனை பேர் அதைச் செய்கிறோம்? அதிக வேலை, அதிக லாபம் இப்படி அதிகமான எல்லாவற்றையும் இழுத்துபோட்டுகொண்டு செய்யும் போது 
அதிகமான துன்பங்கள் நேரிடுகிறது. ஆனால் நாம் செய்த அதிக வேலையால் வந்த துன்பம் என்பதை மறந்து விட்டு, துன்பம் என்பதை மட்டும் நினைத்து புலம்புவோம்.

மேலாண்மை விதி ஒன்று இருக்கிறது. என்னவென்றால் மறுக்க வேண்டியதை ஒப்புக்கொள்ளும் போது பிரச்சனைகள் நேரிடும் என்று. இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். பல நேரங்களில் மற்றவர்களுக்காக, சில நேரங்களில் நமக்காக முடியாது என்று தெரிந்தும், நாம் செய்யக் கூடிய காரியங்கள் இன்பத்தை விட அதிகமான துன்பங்களைத்தான் நமக்குத் தருகிறது.

ஆணைவிட அதிகமாக இருக்கும் அழகான உறுப்புகளான கருப்பை, மார்பு. இவை இரண்டினாலும் பெண்ணை விட ஆண்தான் இன்புறுகிறான். பெண் பாதிக்கப்படுகிறாள். கருப்பை குழந்தை பெறும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆணுக்கு தகப்பன் என்ற பதவி கிடைக்கிறது சமூகத்தில். 
ஆனால் பெண்ணுக்கு தாய் என்ற பதவி - கூடவே வலி வேதனை. குழந்தை பெற முடியாதவளுக்கு மலடி என்ற பட்டம் கிடைக்கிறது. சில நேரங்களில் கருவறையும் கல்லறைதான். உணர்வுகள் உரசி உடல்களை தீண்டும் போது உருவாகும் உயிரை வெளியே வந்து இந்த அவலமான உலகில் அலைக்கழிய 
வேண்டாம் என்று உள்ளே தீயிலே கருக்கி சாம்பலாக்கும் சிவமாக பெண் உருவாகிறாள். உயிர்களைப் படைக்கும் உன்னத படைப்பாளியும் அவளே.

பெண்ணின் உடல் உறுப்பான மார்பு. அதைப்பற்றிக் கண்டிப்பாகச் சொல்லவேண்டும். இது குழந்தைக்கு பால் புகட்டக்கூடிய அமுதசுரபி என்பதைவிட ஆண்கள் பார்வையில் காமம் தரக்கூடிய கவர்ச்சிப் 
பொருளாகத்தான் இருக்கிறது. பெண் என்ன உடை அணிந்தாலும் எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் அவளை, அது ஒரு உறுப்பு என்ற எண்ணம் மறைந்து கற்பை போல் மறைத்து பாதுகாக்கும் பொருட்டு பழக்கப்பட்டுவிட்டதால் ஆண்களும் அப்படியே வளர்க்கப்படுகிறார்கள். இப்படிப் பட்ட சூழலில் மனிதனின் இயல்பான குணம் எதை மறைக்க முயலுகிறோமோ அதை தேடிச் சென்று பார்ப்பது என்பதுதான். அதற்காக மறைக்காமல் வாங்கள் என்று அர்த்தம் கொள்ளாதீர். 

பெண்களே நீங்கள் அதிகமாக உங்களை மறைக்காதீர்கள். இதை ஆடைக்குச் சொல்லவில்லை. உங்கள் ஆசைகள், தேவைகள், வலிமைகள், பெருமைகள, திறமைகள், இவைகளை வெளிப்படுத்துங்கள். எற்கனவே சொன்ன மாதிரி மறுக்க வேண்டிய விசயங்களை மறுத்துவிடுங்கள், கேட்க வேண்டிய விசயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேவைக்கு மீறி ஆசைப்படாதீர்கள், தேவையை கேட்க அஞசாதீர்கள். பெண்களுக்கு என்று சொன்ன இலக்கணங்கங்கள் ஆணுக்கும் பொருந்தும். ஆணுக்குச் சொன்ன இலக்கணங்கள் பெண்ணுக்கும் பொருந்தும். உதாரணமாக நிறையச் செய்திகளை சொல்லலாம். நளனின் சமையல் பக்குவம், ஜான்சி ராணி போன்ற பெண்களின் வீரம் இவற்றை குறிப்பிடலாம்.

 எனவே கீதையில் கண்ணன் சொன்ன மாதிரி எதுவும் நிரந்திரமில்லை. இன்று ஒருவருடைய பொருள் நாளை மற்றொருவருடையது. இததான் நடக்கிறது. இதை புரிந்து கொண்டால் நாம் நம்மை புரிந்து கொள்ளமுடியும்,
நம்மை புரிந்து கொண்டால் மற்றவர்களை புரிந்து நடப்போம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் உலகம் இன்பமயமாகும். 


எழுதியவர்: மு.சரளாதேவி - கோவை

நன்றி : தமிழமுதம் 

6 comments:

கோவி said...

அருமையாகச் சொல்லியிருக்கீங்க.. ஆனால் ஆண் என்ன செய்தாலும் தாங்கிக் கொண்டு, அவனுக்காக உருகும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை என்பது உண்மையே. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் எதையும் மாற்ற முடியாது. அவ்வாறுதான் பெண்கள் பற்றிய சமூக கண்ணோட்டமும்.

sathishsangkavi.blogspot.com said...

பெண்ணியம் பற்றியான ஓர் அற்புதமான கட்டுரை...

நிறைய விசயங்கள் அறிந்து கொண்டேன் இக்கட்டுரையில்...

கலாகுமரன் said...

//ஆண் பிள்ளையை குழந்தைப் பருவத்தில்
இருந்தே கட்டவிழ்த்து சுதந்திரமாக வளர்க்கிறோம். //
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயது வரையே அவர்களை கட்டுப்படுத்த முடியும். ஆதீத தாய்மை ஒருவனை கோழையாக்கிவிடும். ஒவ்வொரு கட்டத்திலும் தனது பிள்ளை என்ற எண்ணத்தை எந்த தாயும் விட்டுக் கொடுப்பதில்லை. நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே.

கலாகுமரன் said...

//திருமணம் என்ற பந்தம் பெணணின் சுதந்திரத்தைப் முழுமையாக பறித்துவிட்டு ஆணின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆயுள் முழுமைக்கும் போடப்பட்ட ஒப்பந்தப் பத்திரம்//

ஒப்பந்தப் பத்திரத்தினால் கிடைக்கும் லாபம் நட்டம் இருவருக்கும் பங்குண்டு. இது வியாபரததனமா இருக்கு. ஒப்பந்த பத்திரம்...இதலெல்லாம் நமக்கு நாமே ஏற்ப்படுத்திக் கொள்வது. மனமொத்த இருவர் வாழ்வின் சுக துக்கங்களை இருவருமே பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இதில் எந்த ஒரு பாண்டும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் புரிந்து வாழ்ந்தால் மட்டுமே இல்லரத்தை புரிந்து கொள்ளமுடியும். பல வீடுகளிலும் இறுதி முடிவு எடுப்பது யார் என சற்று யோசியுங்கள். பெண்களின் ஆதிக்கம் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆணுக்கு ஏற்படுத்தப் படுகிறது.

சில இடங்களில் தலைப்பை விட்டு சென்று விட்டதாக வே தோன்றுகிறது.

நல் ஒழுக்கம் படிப்பால் வருவது அல்ல. பகுத்தறிவிற்கும் படிப்பிற்கும் பல இடங்களில் சம்பந்தம் இருப்பதில்லை. பட்டறிவு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பிறரிடம் அனுபவ அறிவை ஏற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைவாகவே இருப்பதை காண்கிறேன். பெண்களுக்கான சட்டங்கள்...வேறு சமுதாய கண்ணோட்டம் வேறு.

பெண்ணிற்கு முதல் எதிரி பெண் தான். பெண்களே அவர்களுக்குள் முதல் கட்டுப்பாடுகளை விதித்து கொள்கிறார்கள். கட்டுப்பாடு எதில் எதில் வேண்டும் வேண்டாம் எனும் கவனம் தேவை.

பெரும்பாலும் ஆண்களின் போக்கிற்கு காரணம் சமூகம் மற்றொன்று பெண் தான் என்பது என் கருத்து.

அனைவருக்கும் அன்பு  said...

கருத்து பகிர்வுக்கு நன்றி கலாகுமரன் ..........

என் அளவில் அறிந்த உணர்ந்த விசயங்களை நான் பதித்திருக்கிறேன் உங்களின் கோணம் வேறாக இருக்கலாம் ஆனாலும் இவற்றில் பெரும்பான்மைகள் உண்மைதான் .......

ezhil said...

கருத்துகள் அருமை.இன்னமும் பெண் விடுதலை என்பது என்னவோ ஆண்கள் கையில் இருப்பது போலவும் அது கிடைக்க போராடுவது போலவும் பிரம்மை கொண்டுள்ள பெண்கள் ஏராளம். தன்னை முன்னுக்கு கொண்டு வர அவளாக முயற்சி செய்தால்தான் உண்டு. இது ஒரு புறம். அதுவே பெண்ணியத்தை வேறு பாதையில் கொண்டு செல்வோரும் உண்டு. உங்களின் ஒரே கட்டுரையில் பல விவாதங்களை எடுத்துகொண்டுள்ளீர்கள். அதனால் கட்டுரை பல கோணங்களில் பயணித்துள்ளது.